3 மணி நேர இந்தியன் படத்தை ஏழு மணி நேரம் ஓட்டிக் கொத்துக்கறி போட்ட ராஜ் டிவி.. மறக்க முடியாத சம்பவம்..

By vinoth

Updated on:

90 களில் கமல்ஹாசன் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஆனால் 90 களில் கமலுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். அப்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக இந்தியன் உருவாகியிருந்தது.

   

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற தியாகி ஒருவர், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடுகிறார். இந்த ஊழல் படிந்த நாட்டில் தன் மகனும் ஒரு குற்றவாளியாக இருப்பதையறிந்து அவனையும் களையெடுக்கிறார். இப்படி ஒரு கதையை மிகப் பிரம்மாண்டமாக இரு காலகட்டங்களில் உருவாக்கி இருந்தார் ஷங்கர்.

இந்த படம் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அப்போது வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருந்த ராஜ் டிவி நிறுவனம் இந்த படத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியது. ஒரு தீபாவளி நாளில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி டிவியை ஆஃப் செய்யும் அளவுக்கு ரசிகர்களின் பொறுமையை சோதித்தது அந்நிறுவனம்.

மூன்று மணிநேர படத்தை கொத்துக்கறி போட்டு ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் விளம்பரங்களாக போட்டு மொத்தம் 7 மணிநேரம் ஒளிபரப்பியது. இதனால் படத்தை ஒரு கோர்வையோடு பார்க்க முடியாமல் ரசிகர்கள் கடுப்பானார்கள். ஆனால் அப்போது இந்தியன் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு காரணமாக இப்படி ஒரு செயலை செய்து ரசிகர்களின் படம் பார்க்கும் அனுபவத்தை காலி பண்ணியது.