மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 நள்ளிரவில் நெஞ்சை நடுங்க வைக்கும் விபத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிளாட்ஃபார்மை விட்டு நகர்ந்து கொண்டிருந்து ஓடும் உள்ளூர் ரயிலில் பயணி ஒருவர் அவசர அவசரமாக ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தனது கட்டுப்பாட்டை இழந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையேயான ஆபத்தான இடைவெளியில் விழத் தொடங்கினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு நள்ளிரவு ரோந்துப் பணியில் இருந்த RPF காவலர் நாகேஷ் மோஹிதே, நொடிப் பொழுதில் செயல்பட்டு அந்தப் பயணியை உடனடியாகப் பின்னோக்கி இழுத்துக் காப்பாற்றினார். மற்றொரு RPF பணியாளரும் உடனடியாக ஓடிவந்து மீட்புப் பணியில் உதவினார்.
இந்த அதிர்ஷ்டகரமான மீட்பு நடவடிக்கை முழுவதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது. ஆபத்தான சூழலில் துரிதமாகச் செயல்பட்டு பயணியின் உயிரைக் காப்பாற்றிய RPF காவலர் நாகேஷ் மோஹிதேவின் சாதுரியமான செயலையும் விழிப்புணர்வையும் இணையவாசிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
