தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இருபெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. தமிழக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ள முதலமைச்சர் விஜய், பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டெல்லி பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்த விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் கர்நாடக அரசியல் விவகாரங்கள் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களவை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ராகுல் காந்தி பிஸியாக இருந்ததாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் கடுமையான அதிருப்தியும் கூட்டணி அரசியலும் ஒளிந்திருப்பதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்திக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸாரிடம் இருந்தது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பிடித்திருந்த உற்சாகத்தில் இந்த விவகாரம் அப்போது பெரிதாக்கப்படவில்லை என்றாலும், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள சில அரசியல் முரண்பாடுகள் இந்த சந்திப்பு ரத்தாவதற்குக் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளை தவெக தொடர்ந்து தன் பக்கம் இழுத்து வருவது காங்கிரஸிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்திருப்பது இதற்கு சான்றாக அமைந்துள்ளது. கூட்டணி ஆதரவோடு ஆட்சி நடத்தி வரும் தவெக, அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை நோக்கி (118 என்ற மேஜிக் எண்) நகர திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தவெக தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டால், தங்களின் அரசியல் பேரம் பேசும் சக்தி மற்றும் செல்வாக்கு குறைந்துவிடும் என்ற அச்சம் காங்கிரஸிற்கு ஏற்பட்டுள்ளதே ராகுல் காந்தியின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும்.
இதுமட்டுமன்றி, காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரமும் இந்த சந்திப்பில் ஒரு பெரிய அசௌகரியத்தை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மேகதாது திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வரும் வேளையில், தமிழக முதல்வர் விஜய் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி பிரதமரிடம் நேரடியாக மனு அளித்துள்ளார். இந்த முரண்பாடான சூழல் தமிழக மற்றும் கர்நாடக காங்கிரஸ் இடையே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மத்திய அரசுடன் இணக்கம், மறுபுறம் கூட்டணிக் கட்சிகளுடனான சமரசம் என முதல்வர் விஜய் காய்களை நகர்த்தினாலும், தவெகவின் வேகமான வளர்ச்சியில் காங்கிரஸ் தன் அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் ராகுல் காந்தி எச்சரிக்கையாக இருக்கிறார் என்பதையே இந்த சந்திப்பு ரத்து உணர்த்துகிறது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…