நடிகர் ரகுவரனுக்கு இப்படி ஒரு திறமை இருந்ததா..? மனைவி ரோஹினி பகிர்ந்த ஆச்சர்ய தகவல்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 90 களில் மிரட்டல் வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட ரகுவரனின் குடும்பம் கோயம்புத்தூரில் குடிபுகுந்து அங்கு ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது. கோயம்புத்தூர் கல்லூரியில் படித்த ரகுவரன் கலைத்துறையில் ஈடுபட வேண்டும் என சென்னை நோக்கி படையெடுத்தார்.

1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படம் ஓடவில்லை என்றாலும் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்குக் கொடுத்தது. ஆனால் அவருக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

   

அதனால் குணச்சித்திர வேடங்கள், வில்லன் வேடங்கள் என அடுத்தடுத்து படங்களில் நடிக்க சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ரஜினி படங்கள் என்றாலே அதில் வில்லன் ரகுவரன்தான் என்ற அளவுக்கு பிரபலமான வில்லன் நடிகரானார்.

இடையில் போதைப் பழக்கத்துக்கு அடிமையான அவர் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்து சினிமாவில் நடிக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் ரகுவரனுக்குள் நடிப்புத்திறமை மட்டுமில்லை இசை வேட்கையும் இருந்துள்ளது என அவரின் மனைவி ரோகினி தெரிவித்துள்ளார். ஒரு நேர்காணலில் “10 ஆம் வகுப்பு படிக்கும்போதே தனது அம்மாவின் வளையலை வாங்கி அடகுவைத்து கிட்டார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது நண்பர்களோடு இணைந்து நாக் அவுட் என்ற பேண்ட் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சென்னை வந்து தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் கற்றுக்கொண்டு, முதலில் இளையராஜாவின் இசைக்குழுவில் கிடாரிஸ்ட்டாகவும் சில மாதங்கள் வேலை செய்துள்ளார். அதன் பிறகுதான் அவருக்கு நடிப்பில் ஆசை எழுந்து நடிக்க ஆரம்பித்தார்” எனக் கூறியுள்ளார். ரகுவரனின் மறைவுக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து அவரின் இசை ஆல்பம் ஒன்றை ரோஹினி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.