“நான் எதிர்க்கட்சியாகவே இருந்துடுறேன்”…. இபிஎஸ் ரகசியத்தை உடைத்த கிருஷ்ணசாமி…. பின்னணியில் இருக்கும் ‘அதிகார’ அரசியல்…!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தங்களுக்கு 15 தொகுதிகளில் தொடங்கி 7 தொகுதிகள் வரை தருவதாகப் பேசப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, தங்களுக்குரிய தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டாவது, எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் பட்சத்தில் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்ததாக கிருஷ்ணசாமி வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், இந்தக் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாகக் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். “கூட்டணி ஆட்சியில் யாருக்கும் பங்கு கொடுப்பதற்குப் பதிலாக, நான் எதிர்க்கட்சியாகவே இருந்துவிடுவேன்” என்று இபிஎஸ் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். யாருடனும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்ததாகவும், “எனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை, மற்றவருக்கு ஒரு கண் போக வேண்டும்” என்ற மனநிலையில் அவர் செயல்பட்டதாகவும் கிருஷ்ணசாமி சாடியுள்ளார்.

   

திமுகவை வீழ்த்துவதற்கான வலுவான காரணங்களையோ அல்லது சரியான தேர்தல் அணுகுமுறையையோ அதிமுக முன்வைக்கவில்லை என்று கூறிய கிருஷ்ணசாமி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்தும் விமர்சித்துள்ளார். தவெகவிடம் முறையான அடித்தளமோ, தெளிவான நோக்கமோ, எதிர்காலச் செயல்திட்டமோ கிடையாது என்று கூறிய அவர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் பெயர்களைச் சொல்வதைத் தவிர தவெகவிடம் தெளிவான பாதை இல்லை என்பதை அதிமுக மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறிவிட்டது என்றும், இதனால் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

   

மறுபுறம், தமிழக அரசியல் சூழலில் பாஜகவின் செயல்பாடுகளையும் கிருஷ்ணசாமி கேள்விக்குள்ளாக்கியுள்ளார். தவெகவின் அரசியல் எழுச்சிக்கு மறைமுகமாகப் பாஜகவும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற 28 தொகுதிகளை மட்டுமே பாஜக பெற்றது என்றும், வெற்றி பெற்ற தொகுதிகள் எதையும் அவர்களால் வாங்க முடியவில்லை என்றும் சாடியுள்ளார். மத்தியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒரு தேசிய கட்சியால், மாநிலத்தில் ஒரு வலுவான திட்டத்தை வைத்திருக்க முடியவில்லை என்றும், கடந்த தேர்தலில் அதிமுக தங்களுக்கென ஒரு தொகுதியைக் கூட ஒதுக்காததால் தனித்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மீது கிருஷ்ணசாமி தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.