“திமுக – அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மைதான்..? எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியத்தை உடைத்த.. EX MLA சத்யபாமா… அரசியலில் பரபரப்பு…!!”

By Swetha on ஆடி 5, 2026

Spread the love

முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று, ஒருவார தாமதத்திற்குப் பின் ஆட்சியமைத்த சூழலில், தமிழக அரசியலில் ஏற்பட்ட அதிரடி திருப்பங்கள் குறித்து அவர் விளக்கினார். குறிப்பாக, தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்த பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்ததாகக் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த அதிருப்தி காரணமாகவே அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சத்யபாமா உட்பட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து அதிகளவிலான நிர்வாகிகள் தவெகவுக்கு வருவதற்கு அக்கட்சியின் தவறான தலைமையே காரணம் என்று சத்யபாமா சாடினார். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக பெரிய வெற்றியைப் பார்க்கவில்லை என்றும், உட்கட்சி பூசல்களால் தலைமை யாரையும் அனுசரித்துச் செல்வதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்ததாகவும், அது நடக்காமல் போனதற்கு அதிமுக தலைமையின் தவறான அணுகுமுறையே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

மேலும், புதுச்சேரி ரிசார்ட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி தங்களைச் சந்தித்துக் கூறியதாக சத்யபாமா பகிரங்கமாகத் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களான தங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறினார். திமுக ஆட்சியில் தாங்கள் பல இடையூறுகளைச் சந்தித்த நிலையில், இபிஎஸ்ஸின் இந்த முடிவால்தான் தாங்கள் அதிமுகவை விட்டு விலகி தவெகவில் இணைந்ததாகக் குறிப்பிட்ட அவர், வரும் இடைத்தேர்தலில் வாய்ப்புக் கேட்டு தாராபுரம் மக்களுடன் இணைந்து முழு திருப்தியோடு பணியாற்றப் போவதாகவும் உறுதியளித்தார்.