” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள் அலைக்கழிப்பு விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்குப் புனித நீருக்குப் பதிலாகக் குடிநீர் தெளிக்கப்பட்டதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது அறிக்கையில், “இன்று நடைபெற்ற ஒட்டுமொத்த கும்பாபிஷேக நிகழ்வும் இந்து சமய அறநிலையச் சட்டங்களுக்கும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது. அனுபவம் வாய்ந்த கோயில் அறங்காவலர் குழுவைப் புறக்கணித்துவிட்டு, அனுபவமில்லாத அதிகாரிகளை வைத்துக் கும்பாபிஷேகத்தை நடத்தியதால்தான் பக்தர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது” எனத் தவெக அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

   

மேலும், “கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில்தான் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை மீட்டெடுத்தது உட்பட 95 சதவீதத்திற்கும் அதிகமான திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்திற்கான அனைத்துக் களப்பணிகளையும் முந்தைய அரசே முடித்து வைத்திருந்த நிலையில், இறுதிக்கட்ட விழாவைக் கூடச் சரியாக ஒருங்கிணைக்கத் தெரியாமல் தவெக அரசு பக்தர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது” என்று பிடிஆர் மிகக் காட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.