மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான நிர்வாகத்தால் பக்தர்களுக்குச் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காகத் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை 2 மணி மற்றும் 3.30 மணி முதலே வந்த நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர். “விஐபிக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து பாஸ் வைத்திருப்பவர்களை மட்டும் போலிஸார் அனுமதிக்கிறார்கள். எங்களுக்குக் குடிநீர் வசதி கூடச் செய்து தரப்படவில்லை. 10 நிமிடத்தில் எங்களை உள்ளே விடாவிட்டால் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வோம்” எனப் பெண் பக்தர்கள் ஆவேசமாகக் கொந்தளித்தனர்.
மேலும், “ஹெலிகாப்டர் மூலம் பக்தர்களுக்குப் புனித நீர் தெளிக்கப்படும் என்று அரசு உறுதியளித்த நிலையில், பொதுமக்கள் மீது ஒரு சொட்டு தீர்த்தம் கூடத் தெளிக்கப்படவில்லை. தீர்த்தம் தெளிக்காமல் இங்கிருந்து நகர மாட்டோம்” என பக்தர்கள் மாசி வீதிகளில் முழக்கமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோயில் வளாகத்தில் கடும் பரபரப்பான சூழல் நிலவியது.
