வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் ‘மிஸ்ஸிங் லிங்க்’ சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச் சேர்ந்த 35 வயதான காங்கிரஸ் நிர்வாகி துஷார் பூம்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமார் 1.20 மணியளவில், துஷார் பூம்கர் உட்படப் பலருடன் மும்மை நோக்கி அதிவேகமாகச் சென்ற எஸ்.யு.வி கார், முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு டெம்போ வாகனத்தின் பின்புறம் பலமாக மோதியதில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. பூம்கரின் மனைவி முன்பு பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த பூம்கர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், இந்த விபத்தில் காரின் ஓட்டுநர், அதில் பயணித்த மற்றவர்கள் மற்றும் டெம்போவின் ஓட்டுநர், கிளீனர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் லேசான காயங்களுடன் நலமாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக லோனாவாலா நகரக் காவல் நிலைய ஆய்வாளர் சச்சின் பாட்டீல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பூம்கரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தின் காரணமாகச் சுரங்கப்பாதைக்குள் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும், மீட்புக் குழுவினர் சேதமடைந்த வாகனங்களை விரைவாக அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
