தமிழ் சினிமாவில் 90 களில் ஒரு புதிய போக்கு உருவாக ஆரம்பித்தது. படத்துக்கு மிக அதிகமாக செலவு செய்து பிரம்மாண்டமான படமாக எடுத்து அதை வெற்றிப்படமாக ஆக்குவது. இந்த வரிசையில் ஷங்கர், கதிர், பிரவீன் காந்த் போன்ற இயக்குனர்கள் அப்போது உருவானார்கள்.
அதே போல தயாரிப்பாளர் வரிசையில் பிரம்மாண்ட படங்கள் எடுப்பதில் முன்னணியில் இருந்தவர் கே டி குஞ்சுமோன். மலையாள சினிமாவை சேர்ந்தவரான குஞ்சுமோன், அங்கு சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாகத் தயாரித்து வந்தார். தமிழில் வசந்தகால பறவை என்ற திரைப்படத்தை தயாரித்து அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை என்றாலும் அடுத்து அதே இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் சூரியன் என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனால் இந்த பிரம்மாண்ட பார்முலாவைக் கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் தயாரித்தவை எல்லாம் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள். ஜெண்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் மற்றும் நிலவே வா ஆகிய படங்களை தயாரித்தார்.
இதையடுத்து தனது மகனைக் கதாநாயகனாக ஆக்கும் ஆசையில் அதுவரை இல்லாத பட்ஜெட்டில் கோடீஸ்வரன் என்ற படத்தை தயாரித்தார். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் கூட ரிலீஸாகின. ஆனால் படத்தின் மேல் ஏற்பட்ட அளவுக்கதிகமான கடன் காரணமாக அந்த படத்தை அவரால் கடைசி வரை ரிலீஸ் செய்யவே முடியவில்லை. அவரது மகனாலும் கதாநாயகன் ஆகமுடியவில்லை.
இந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் அவரால் படமே தயாரிக்க முடியவில்லை. இப்போது தன்னுடைய ஹிட் படங்களில் ஒன்றான ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்த படம் அவரின் ரி எண்ட்ரியாக அமையுமா என்று ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.