மணிரத்னம் முதலில் இயக்கிய தமிழ் படம் இதயக் கோவில். அதன் பிறகு பகல் நிலவு படத்தை இய்க்கினார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமாக அமையாததால் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் தனது முதல் ஹிட்டை மௌனராகம் திரைப்படத்தின் மூலமாகதான் கொடுத்தார்.
இந்நிலையில் அவரின் திறமையை இந்த இரண்டு படங்களிலேயே கண்டுபிடித்துள்ளார் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன். கன்னிராசி மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாண்டிராஜனின் இரண்டாவது படம் ஆண்பாவம். பாண்டியனோடு அவரும் ஒரு கதாநாயகனாக அந்த படத்தில் நடித்திருந்தார். அண்ணன் தம்பியான பெரிய பாண்டி, சின்ன பாண்டி ஆகியவர்களின் குறும்புத்தனமான வாழ்க்கையில் திருமணம் குறுக்கிடும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பின்னான முடிவுகளுமே இந்த படத்தின் கதை.
இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார் பாண்டியராஜன். இதனால் இந்த படம் பல தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்டது. அதனால் அடுத்தடுத்து பாண்டியராஜனை நடிக்கவைத்து படங்கள் இயக்க பலரும் முன்வந்துள்ளனர்.
அப்படி தன்னிடம் வந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் “உங்களுக்கு நான் படம் நடிக்க வேண்டுமென்றால் இயக்குனர் மணிரத்னத்திடம் போய் பேசி சம்மதம் வாங்கி வாருங்கள். அவர் இயக்குவதாக இருந்தால் நான் உங்களுக்கு படம் நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் அப்போது மணிரத்னம் பெரிய இயக்குனராக வளர்ந்து வராததால் அந்த தயாரிப்பாளர் தயங்கியுள்ளார்.
ஆண்பாவம் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட மணிரத்னம் இதைப் பற்றி குறிப்பிட்டு பாண்டியராஜனுக்கு நன்றி தெரிவித்து சென்றாராம். அதன் பின்னர்தான் மணிரத்னம் அடுத்தடுத்து ட்ரெண்ட் செட்டிங் படங்களை எடுத்து இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உருவானார் என்பது குறிப்பிடத்தக்கது.