தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான திமுக, தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேமுதிகவுடன் கைகோர்த்துள்ளது. தேமுதிகவின் 20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் தேமுதிகவிற்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தேமுதிக தரப்பில் சுமார் 20 தொகுதிகள் அடங்கிய பட்டியல் திமுக தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் விருத்தாசலம், விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் விஜயகாந்த் முதன்முதலில் வென்ற சென்டிமென்ட் தொகுதியான விருத்தாசலத்தில் போட்டியிட முதலில் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், திமுக தலைமை பிரேமலதாவை சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதால், அவருக்குப் பலமான போட்டியாக பிரேமலதா இருப்பார் என்று திமுக கணக்கு போடுகிறது. இதன் மூலம் தமிழிசைக்கு கடும் சவாலை ஏற்படுத்தி, அந்தத் தொகுதியில் ‘டபுள் விக்டரி’ பெற திமுக வியூகம் வகுத்துள்ளது.
மேலும், பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் இந்த அதிரடித் திட்டங்கள் மற்றும் பிரேமலதாவின் நேரடி தேர்தல் களம் ஆகியவை வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
