ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்ட பெண், குடும்பத் தகராறில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரியைச் சேர்ந்த 25 வயதான கிராந்தி என்பவரது வீட்டில், ஏசி பழுதைச் சரி செய்ய வந்த ஷேக் அகமது (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இதனால், கிராந்தி தனது முதல் கணவரைச் சட்டப்படி பிரிந்துவிட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஷேக் அகமதுவை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
மத வேறுபாடு மற்றும் கிராந்தியின் முந்தைய திருமணம் காரணமாக, ஷேக் அகமதுவின் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அனைவரையும் எதிர்த்து மங்களகிரி அரசு குடியிருப்பில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். ஆனால், திருமணமான சில காலத்திலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, குடும்பத் தகராறு அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. சமூக ரீதியான அழுத்தங்களும், தனிப்பட்ட புரிதல் இன்மையும் இவர்களது வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய ஷேக் அகமதுவிற்கும் கிராந்திக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற கிராந்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷேக் அகமதுவின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி ஷேக் அகமது பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில், டிவியின் சத்தத்தைக் குறைக்கச் சொன்னதால் கணவர் கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் ஒரு தவறான தகவல் பரவியது. ஆனால், இதனை மறுத்துள்ள போலீசார், ஷேக் அகமது வசித்து வந்த வீட்டில் தொலைக்காட்சியே இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போது ஷேக் அகமதுவின் தாயார் அளித்த புகாரின் பேரில், கிராந்தி மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
