மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மதுரையில் வாக்கு சேகரித்த பிரகாஷ் ராஜ், ஒரு இயக்குநராக சுந்தர்.சியை மதித்தாலும், மக்கள் பிரதிநிதியாக அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். திடீரென அரசியலில் குதித்து மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது மதுரை மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் சாடினார்.
சுந்தர்.சியின் அரசியல் வருகையை ‘யானை மாலை போட்ட கதை’ என்று வர்ணித்த பிரகாஷ் ராஜ், வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் இருந்த ஒருவருக்கு, மக்கள் பிரச்சனைகளைப் பற்றி என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார். மதுரை மக்களுக்கோ அல்லது இந்திய அரசியலுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருந்த ஒருவர், திடீரென வேட்பாளரானால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா என்று வினவிய அவர், சுந்தர்.சி போட்டியிடும் புதிய நீதிக்கட்சி, பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பாஜக நேரடியாகத் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என்பதால், இது போன்ற திரைமறைவு கூட்டணிகள் மூலம் நுழையப் பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஒரு சிறந்த இயக்குநராக உருவெடுக்க சுந்தர்.சி பல ஆண்டுகள் கடினமாக உழைத்திருப்பார் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரகாஷ் ராஜ், அதே அளவு உழைப்போ அல்லது கள அனுபவமோ இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் பதவி மட்டும் மிக எளிதாகக் கிடைத்துவிடுமா என்று கேள்வி எழுப்பினார். ஆட்சியின் குறைகளை மட்டும் பேசிவிட்டு கடந்து செல்வது முறையான அரசியல் அல்ல என்றும், கடந்த கால சாதனைகளையும் மக்கள் பணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வெறும் பேச்சைக் கொண்டு மக்களின் வாக்குகளைப் பறித்துவிடலாம் என்ற எண்ணம் தவறானது என்பதை அவர் தனது உரையில் பதிவு செய்தார்.
இறுதியாக, சுந்தர்.சியின் மனைவி குஷ்புவின் அரசியல் பயணத்தையும் பிரகாஷ் ராஜ் விட்டுவைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மூன்று கட்சிகளுக்குத் தாவிவிட்டு தற்போது அரசியல் பேசும் குஷ்புவிற்கே கிடைக்காத சீட், திடீரென சுந்தர்.சிக்கு எப்படி கிடைத்தது என்பதை அவர் யோசிக்க வேண்டாமா என்று எள்ளிநகையாடினார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த இரு முக்கிய ஆளுமைகளுக்கு இடையே வெடித்துள்ள இந்த கருத்து மோதல், சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
