கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச் சாடினார். மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முறியடித்திருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தச் செயல் பெண் சிசுவை கருவிலேயே கொலை செய்வதற்குச் சமமானது என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளாகியும் பெண்கள் தங்களின் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவத்திற்காகப் போராடி வரும் சூழலில், திமுகவின் இந்த அணுகுமுறை பெண்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று அவர் விமர்சித்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு என்பது 40 ஆண்டுகால கனவு என்றும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், அந்த மசோதாவை முதலமைச்சர் எரித்தது தேசத்துரோகச் செயல் என்று சாடினார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டு மகளிர் நலனுக்கான சட்டத்தை எரிப்பது மிகப்பெரிய குற்றம் என்றும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களுக்கான சட்டம் தோல்வியடைந்ததைப் பட்டாசு வெடிக்கிக் கொண்டாடும் முதலமைச்சரின் மனநிலையைத் தமிழ்நாட்டுப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருந்தால், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருப்பார்கள் என்றும், அதில் 20 பேர் பெண்களாக இருந்திருப்பார்கள் என்றும் அவர் விளக்கினார். அதேபோல், 2031 சட்டமன்றத் தேர்தலில் 117 பெண் எம்.எல்.ஏக்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பார்கள். உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களைப் போல தொகுதி எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படும் எனப் பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில், இதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பிய அன்புமணி, ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியல் இனப் பெண்கள் அதிகாரம் பெறுவதை திமுக தடுக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
மறுபுறம், தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், பிரேமலதா விஜயகாந்த் திமுகவை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் செயல்படுகிறார் என்று குறிப்பிட்டார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் பெருகி வரும் கஞ்சா, மது மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து முதலமைச்சர் முன்னிலையிலேயே அவர் துணிச்சலாகப் பேசி வருவதாகச் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதோடு, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தையும் திமுக எதிர்க்கிறது என்பதே தற்போதைய கள யதார்த்தம் என்று அவர் தனது உரையில் முடித்தார்.
