கன்னட நடிகை சைத்ரா, தனது கணவரும் தயாரிப்பாளருமான ஹர்ஷவர்தனால் திட்டமிட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் இந்தத் தம்பதிக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்கச் சைத்ரா மறுத்ததால், அவரைத் தந்திரமாக மிரட்டிக் குழந்தையைப் பறிக்க ஹர்ஷவர்தன் சதி செய்துள்ளார்.
இதற்காகத் தனது நண்பர் மூலம் ஒரு போலிப் படப்பிடிப்பு வாய்ப்பை உருவாக்கி, முன்பணம் கொடுத்துச் சைத்ராவை மைசூரு அழைத்துச் செல்வது போல் காரில் ஏற்றியுள்ளனர். நைஸ் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஹர்ஷவர்தன் வழிமறித்து நாடகமாடிச் சைத்ராவைத் தாக்கி தனது வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர், சைத்ராவின் தாயைத் தொடர்பு கொண்டு, “என் மகளை என்னிடம் கொடுத்தால் தான் உன் மகளை விடுவிப்பேன்” என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பேடராயனபுரா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஹர்ஷவர்தனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு குழந்தைப் பாசப் போராட்டம் கடத்தல் சம்பவமாக மாறியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
