தைவானின் சியாவோகாங் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக வைத்துள்ள விளம்பரப் பலகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போஸ்டரில் இந்தியத் தேசியக் கொடி மற்றும் தலைப்பாகை அணிந்த இந்தியர் ஒருவரின் படம் அச்சிடப்பட்டு, அதன் மேல் “தடை” செய்வதைக் குறிக்கும் சிவப்பு நிறக் குறியீடு போடப்பட்டுள்ளது. இந்தியத் தொழிலாளர்களை தைவானுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வைக்கப்பட்ட இந்த போஸ்டர், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய குடிமக்களிடையே அதிர்ச்சியையும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவி உலகளாவிய ரீதியில் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அங்குள்ள சில எதிர்க்கட்சி மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் இத்தகைய இனவெறி கலந்த பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தைவான் அரசியலில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான பதற்றத்தையும், இந்திய தொழிலாளர்கள் குறித்த தவறான கருத்துகளையும் பரப்ப வழிவகுத்துள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர் காரணமாக தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயமும், எதிர்கால வேலைவாய்ப்பு குறித்த அச்சமும் பரவியுள்ளது. நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, இந்தியாவில் உள்ள தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் (TECC) இந்த போஸ்டர் விவகாரத்திற்கும் தைவான் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து, இதிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்டுள்ளது. உள்ளூர் தேர்தல் அரசியலுக்காகச் செய்யப்பட்ட இந்தச் செயல், இரு நாட்டு உறவுகள் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
