புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடும்பத் தகராறில் இரண்டாவது மனைவியைக் கொன்று உடலைக் குழி தோண்டிப் புதைத்ததாக அரியலூர் காவல் நிலையக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிலாவிடுதி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (39) என்பவருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்த நிலையில், மழையூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது பெட்ரோல் பங்க் ஊழியரான மௌனிகா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மௌனிகா தனக்குத் பிறந்த 7 வயது மகனின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்க்குமாறு கூறியபோதும், பிரபாகரன் அதில் ஈடுபாடு காட்டாததாலும், ஏற்கெனவே காவல் ஆணையரிடம் மௌனிகா புகார் அளித்துத் தன் பணிமாறுதலுக்குக் காரணமாக இருந்ததாலும் பிரபாகருக்கு அவர் மீது கடும் ஆத்திரம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 7 அன்று மௌனிகாவை அரியலூருக்கு அழைத்துச் சென்ற பிரபாகரன், திட்டமிட்டு அவரைத் தீர்த்துக்கட்டிவிட்டு, ஊருக்குத் திரும்பியதும் அவர் மாயமாகிவிட்டதாக நாடகமாடியுள்ளார். மனைவி காணாமல் போனது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், பிரபாகரனுக்குச் சொந்தமான நிலத்தின் அருகே குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்த மௌனிகாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட காவலர் பிரபாகரனைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
