கடலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை நடைபெறவுள்ள தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கான’ பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிகழ்விற்காக நிதி திரட்டும் நோக்கில், விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதியில் கல்குவாரி நடத்தி வரும் பாலகிருஷ்ணன் என்பவரிடம் தேமுதிக நிர்வாகிகள் சிலர் நன்கொடை கேட்டுள்ளனர். அவர் பணம் தர முன்வராததால், ஆத்திரமடைந்த நிர்வாகிகள் அவருக்கு மிரட்டல் விடுத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த கிளியனூர் காவல்துறையினர், மிரட்டல் விடுத்த தேமுதிக ஒன்றிய செயலாளர் தணிகைவேலை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரான கலியமூர்த்தியைத் தேடி வருகின்றனர். ஒருபுறம் கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தினாலும், நாளை பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
