தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியில் நிர்வாகிகள் பலரை நீக்கினாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் இன்று பிற்பகலில் வருகை தந்து அவரை நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசினார். மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் வரும் காலம் நமதே என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் அரசியல் முக்கிய கருத்துக்கள் குறித்து பேசியதாகவும் சதாசிவம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு மூலம் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
