இன்றைய கல்விமுறை மற்றும் ஊழல் குறித்துப் பேசிய திலகபாமா, ஆசிரியர் பணிக்கே லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துச் செல்லும் அவலத்தைச் சுட்டிக்காட்டினார். அப்படிச் செல்பவர்கள் மாணவர்களுக்கு எப்படி உண்மையைச் சொல்லிக்கொடுப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பிய அவர், மதுக்கடைகளுக்கு எதிரான தனது போராட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மதுக்கடையை மூட நீதிமன்ற ஆணை இருந்தும், அதனை மீறித் திறந்த நிர்வாகத்திற்கு எதிராகப் போராடிய போது, “பெண்களை அசிங்கமாகத் திட்டினால் ஓடிப் போய்விடுவார்கள்” என்று ஏளனம் செய்ததைக் கண்டு ஆத்திரமடைந்து, கல்லை எடுத்து வீசி மதுபாட்டில்களைத் தீயிட்டுக் கொளுத்திய துணிச்சலான சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
அன்று தன்னுடன் கைதானவர்கள் அரசியல் தெரியாத சாமானியப் பெண்கள் மற்றும் கைக்குழந்தை வைத்திருந்த தாய்மார்கள் என்றும், அவர்களைக் கைது செய்ததன் நோக்கம் அவர்கள் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்பதே என்றும் அவர் குற்றம் சாட்டினார். “இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டிய முதல் நபராக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என்று குறிப்பிட்ட அவர், செல்லும் இடமெல்லாம் மாற்றத்திற்கான தனது சொற்களை விதைத்துக் கொண்டே இருப்பதாகவும் உறுதியுடன் தெரிவித்துள்ளார். அதிகாரத்திற்கு அஞ்சாத ஒரு பெண்ணின் அரசியல் போராட்ட வரலாறாகத் திலகபாமாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்று வருகிறது.
