பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உள்கட்சி மற்றும் குடும்ப ரீதியிலான மோதல்கள் தற்போது முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தைலாபுரத் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக, ராமதாஸ் தனி இயக்கம் தொடங்கி கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். எனினும், தேர்தல் ஆணைய விதிகளின்படி பாமக அன்புமணி வசம் வந்தது. இந்தத் தேர்தலில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறாத நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி தரப்பு 4 தொகுதிகளில் வென்று அசத்தியது. குறிப்பாக சவுமியா அன்புமணி வெற்றி பெற்று சட்டசபை சென்றது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தந்தை – மகன் பிரிந்திருந்தது கவலையளிப்பதாகவே இருந்தது.
இந்த நிலையில், ராமதாஸ் – சரஸ்வதி அம்மையார் தம்பதியரின் திருமண நாளையொட்டி இந்த நீண்ட நாள் பனிப்போருக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தனது மனைவி மற்றும் மகள்களுடன் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்குத் திடீரென வருகை தந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த குடும்பத்துடன் வந்த அன்புமணிக்கு, தைலாபுரத்தில் ஆரத்தி எடுத்து, திலகமிட்டு மிக நெகிழ்ச்சியான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது தந்தை ராமதாஸிடம் அன்புமணி ஆசி பெற்று, அவருக்குத் திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த கால மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து, இரு தரப்பினரும் பரஸ்பரம் நலம் விசாரித்து மனம் விட்டுப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலுக்குப் பின் பாமகவை முழுமையாக அன்புமணி வசம் கொடுத்துவிடுவதாக ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு ஒட்டுமொத்த பாமக குடும்பத்தையும், தொண்டர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒன்றரை மாதங்களாகிவிட்ட சூழலில், தற்போது பாமகவின் இரு துருவங்களும் இணைந்திருப்பது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பாமகவை, தங்களது பக்கம் இழுக்க திமுகவும், தங்கள் கூட்டணியிலேயே தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும் தீவிரமாக முயன்று வருகின்றன. தந்தை – மகன் இடையேயான இந்த அரசியல் மற்றும் குடும்ப இணைப்பு, வரும் நாள்களில் பாமகவின் அரசியல் நகர்வுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
