“இதோட நிறுத்திக்கோங்க”.. TVK அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் விடுத்த பகிரங்க எச்சரிக்கை… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு….!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

தமிழகத்தில் தற்போதைய த.வெ.க அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தரவுகளோடு விமர்சித்து வரும் இளைஞர்கள் மீது காவல்துறை ஏவப்படுவதாக திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ‘GenZ DMK’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறை கைது செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ‘Gen Z’ கூட்டத்தில் த.வெ.க-வின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய கனி என்ற இளைஞர் மீது சைதாப்பேட்டையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்ட த.வெ.க ரவுடிகள் மீது இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை, மாறாகப் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தம்பி கனியை மிரட்டி வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளது. அரசின் இத்தகைய ஒருதலைப்பட்சமான போக்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகத்திற்குத் துணையாகச் செயல்படுவதையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

   

மக்களை ஏமாற்றும் சினிமா வெளிச்சத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த “சோபா மாடல்” அரசின் போலி பிம்பம், விழிப்புணர்வுடன் இருக்கும் இன்றைய GenZ இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருகிறது. நிர்வாகத் திறனற்ற த.வெ.க அரசின் தவறுகளை இளைஞர்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் தோலுரிப்பதைக் கண்டு பயந்துபோன ஆட்சியாளர்கள், தற்போது அதிகார பலத்தைக் கொண்டு அடக்குமுறையைக் கையில் எடுத்துள்ளனர். கேமராக்களுக்கு முன்னால் “ஜனநாயகம், கருத்துரிமை” என்று மனப்பாடம் செய்த வசனங்களைப் பேசிவிட்டு, இருட்டில் நள்ளிரவில் போலீஸை ஏவி மிரட்டுவது அப்பட்டமான சர்வாதிகாரம் என்று திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

   

விமர்சனங்களை நேர்கொண்டு சந்திக்க வக்கற்ற ஒரு “தொடைநடுங்கி” அரசாங்கமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியையும் அரசையும் எதிர்த்துக் கேள்வி கேட்டால் ஆன்லைன் ரவுடிகளை ஏவி ஆபாசமாகத் திட்டுவதும், நள்ளிரவில் காவல்துறையை அனுப்பி அச்சுறுத்துவதுமே இவர்களின் மாற்று அரசியலா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. கழக இளைஞர்களைக் காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், திமுக அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்றும், அதிகார வெறியுடன் செயல்படும் இந்த கோழைத்தனமான அரசுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் விரைவில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.