பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயம் ராமதாஸ் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ராமதாஸ் நடத்திய பொது குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால் மேலும் இருவருக்கு இடையேயான மோதல் அதிகரித்தது. இதனிடையே அதிமுக கூட்டணியில் அன்புமணி, திமுக கூட்டணியில் ராமதாஸ் செல்ல வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கியபோதும், பின்னர் நீங்கள் (நிர்வாகிகள்) விரும்பும் கூட்டணியை அமைப்பேன் என்று ராமதாஸ் பேசியபோதும் அதிமுக, அதிமுக என கட்சி நிர்வாகிகள் குரல் எழுப்பினர். இதனால் கூட்டணி கணக்கு மாறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
