தமிழக அரசியலில் உருவெடுத்துள்ள புதிய கூட்டணிக் கணக்குகள், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் எதிர்பாராத புதிய புயலைக் கிளப்பியுள்ளன. திமுகவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு தென்னிந்தியாவில் தன் செல்வாக்கை உயர்த்த நினைக்க, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்ததாகக் கூறப்படும் சூழலில், அந்தத் திட்டம் தற்போது காங்கிரஸ் தலைமையின் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, விஜய் தரப்பில் கட்டமைக்கப்படும் அதிரடி டிஜிட்டல் பிம்பமும், தேசிய அளவிலான அவரது அரசியல் எழுச்சியும் ராகுல் காந்தியின் தேசியத் தலைமைக்கே சவாலாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக மற்றும் மு.க. ஸ்டாலின் நிழலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு சிறிய கட்சியாகச் சுருங்கிவிட்டதாகக் கருதிய ராகுல் காந்தி, தவெகவை ஒரு காயாகப் பயன்படுத்த நினைத்தார். ஆனால், தவெகவின் ஐடி விங் மற்றும் முன்னணி இன்ஃப்ளூயன்சர்கள் விஜய்யை இந்தி பேசும் வட மாநிலங்களிலும், பெரும் நகரங்களிலும் ஊழலற்ற, மதச்சார்பற்ற புதிய தலைவராகப் பிராண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். வெறும் மாநில அரசியலோடு நின்றுவிடாமல், வட இந்தியாவிலும் விஜய் அலை வீசத் தொடங்கியிருப்பது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நகர்வுகளின் உச்சக்கட்டமாக, 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுக்கள் தவெக ஆலோசகர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளன. வட இந்தியாவில் பாஜகவை வீழ்த்தக்கூடிய புதிய மற்றும் கவர்ச்சிகரமான பான்-இந்தியா முகமாக விஜய் இருப்பார் என்றும், காங்கிரஸின் வழக்கமான முகங்களைவிட விஜய்யால் மட்டுமே பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் கூறப்படுவது ராகுல் காந்தியின் பிரதமர் கனவுக்கு நேரிடையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.
விஜய்யின் இந்தத் திடீர் தேசிய ஆசைகளை பகிரங்கமாக எதிர்க்கவும் முடியாமல், அதேநேரம் ராகுல் காந்தியின் பிரதமர் வேட்பாளர் கனவை விட்டுக்கொடுக்கவும் முடியாமல் தமிழ்நாடு காங்கிரஸும், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியும் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளன. ஸ்டாலினின் ஆதிக்கத்தைத் தவிர்க்க நினைத்துப் போட்ட கணக்குகள் தலைகீழாக மாறி, விஜய்யின் இந்த அதிரடி அரசியல் மூவ் காரணமாக 2029-ஐ நோக்கிய களம் காங்கிரஸ் மற்றும் தவெக இடையே ஒரு மறைமுக அதிகாரப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
