சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டக் கோரி மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின் போது திடீரென 12 மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த மாணவிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, கல்லூரி முதல்வர் கேட்டை பூட்டி தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த சக மாணவிகள், சக தோழிகளின் உயிரைக் காப்பாற்றும் அவசர நோக்கில் கல்லூரி கேட்டை உடைத்துக்கொண்டு மயங்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அடிப்படை வகுப்பறை வசதிகள் இல்லாததால் எழுந்த இந்த போராட்டம், நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையினாலும் மாணவிகளின் கொந்தளிப்பினாலும் அப்பகுதியில் பெரும் பதற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
