ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா நகரில், கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெய்த கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கார்கள் பனியில் முழுவதுமாகப் புதைந்துள்ள நிலையில், வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் பனிக்கட்டிகளை உடைத்துச் சுரங்கம் போன்ற வழிகளைத் தோண்டி வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் சுமார் 40 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பால் மற்றும் ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
பசிபிக் பெருங்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் ஏற்பட்ட இந்தப் பனிப்புயலுக்கு இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். வீடுகளின் கூரைகளில் தேங்கியுள்ள பனியை அகற்ற முயன்றபோது, அவை சரிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், அந்த நகரமே தற்போது வெண்ணிறப் போர்வையால் போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கிறது.
