பிரபல நடிகை ஊர்வசி மற்றும் அவரது மகள் தேஜாலட்சுமி ஆகிய இருவரும் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிறுவயதில் ‘பஞ்சதந்திரம்’ படப்பிடிப்பின் போது தன்னை கமல் கவனித்துக் கொண்ட நினைவுகளைத் தேஜாலட்சுமி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் அவரிடம் பேச முடியாமல் தவறவிட்டதால் வருத்தப்பட்ட தனக்கு, இந்த பொங்கல் சந்திப்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழகான தருணத்தைப் பார்த்த ஊர்வசியின் முன்னாள் கணவரும், நடிகருமான மனோஜ் கே.ஜெயன், “அம்மா மற்றும் கமல் சாருடன் இருக்கும் இந்த நொடிகள் பொன்னானவை” எனத் தனது மகளுக்கு அன்புடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விரைவில் ‘சுந்தரியாவள் ஸ்டெல்லா’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாகத் திரையுலகில் தேஜாலட்சுமி தடம் பதிக்கவுள்ளார். பெற்றோர்கள் பிரிந்திருந்தாலும், மகளின் மகிழ்ச்சிக்காகத் தந்தை பதிவிட்ட இந்த நெகிழ்ச்சியான கருத்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
