கேரளாவில் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள ஷிகெல்லா பாக்டீரியா தொற்று, குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு தீவிரமான நோய்த்தொற்றாகும். இந்த பாக்டீரியா முக்கியமாகத் தூய்மையற்ற குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் மூலமாகப் பரவுகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட ஒருவரின் கழிவுகள் கலந்த நீர்நிலைகள் அல்லது கைகளைச் சரியாகக் கழுவாமல் உணவைக் கையாளுதல் போன்றவற்றால் இது எளிதில் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது.
மேலும் ஈக்கள் மூலமாகவும் இந்த பாக்டீரியா பரவ வாய்ப்புள்ளதால், பொது இடங்களில் உணவருந்தும் போது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. இந்தத் தொற்றின் முக்கிய அறிகுறிகளாக கடுமையான வயிற்றுப்போக்கு காய்ச்சல், வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியவை காணப்படுகின்றன. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள, குடிநீரைக் காய்ச்சி ஆறவைத்துக் குடிப்பது மற்றும் உணவை மூடி வைப்பது மிகவும் அவசியம்.
இதனால் கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுதல், கழிப்பறை சுகாதாரம் மற்றும் காய்கறி, பழங்களை நன்கு கழுவிய பின் பயன்படுத்துவது போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஷிகெல்லா பரவலைத் தடுக்க முடியும். அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவும்.
