பிஎஃப் பணத்தை எடுக்க போறீங்களா?… இனி சீனியர் சிட்டிசன்களுக்கும் ஒரே படிவம் தான்… குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விளக்கம்…!!!

By Rajeshwari on சித்திரை 17, 2026

Spread the love

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வரி பிடித்தம் தொடர்பான நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் படி, பிஎஃப் தொகையை எடுக்கும்போது வரி பிடித்தத்தைத் தவிர்க்கப் பயன்படுத்தப்பட்ட பழைய படிவம் 15G மற்றும் 15H ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் அவற்றுக்குப் பதிலாக தற்போது ‘படிவம் 121’என்ற ஒருங்கிணைந்த புதிய சுய-அறிவிப்பு படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்றி அனைத்து பிஎஃப் உறுப்பினர்களும் இனி இந்தப் படிவத்தையே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இதனால் EPFO வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, பிஎஃப் பணம் எடுப்பவர்கள் அனைவருமே படிவம் 121-ஐ சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல. ஒரு நிதியாண்டில் தங்களின் மொத்த மதிப்பீட்டு வருமானம் வரி விலக்கு வரம்பிற்குள் இருப்பவர்கள் மட்டுமே, பிஎஃப் தொகையில் வரி பிடித்தம் செய்யப்படுவதைத் தவிர்க்க இந்தப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

   

இந்நிலையில் 60 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என இரு தரப்பினருக்கும் இது பொதுவானது. எனினும், நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது. ஏப்ரல் 1-க்குப் பிறகு பழைய படிவங்களைச் சமர்ப்பித்தவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படாது என்றாலும், அவர்கள் கூடுதலாகப் படிவம் 121-ஐ வழங்க வேண்டும் என EPFO அறிவுறுத்தியுள்ளது.