நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பனிப்பாறை உடைந்து பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை இல்லாத நேரத்தில் திடீரெனப் பாய்ந்து வந்த பேரழிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் மாயமாகினர்.
இந்தச் சூழலில், பேரழிவு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 12, 2026 அன்று ‘யெஷுவா காஸ்பெல் மினிஸ்ட்ரீஸ்’ யூடியூப் சேனலில் பாஸ்டர் பெரெஸ் டீ வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதையும், வீடுகள் நீரில் மூழ்குவதையும் நான் காண்கிறேன்; நேபாள நாட்டிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DcmBjGtEru8/?utm_source=ig_web_copy_link&igsi=MzRlODBiNWFlZA==
அவர் வெளியிட்ட அதே வீடியோவில் வெள்ளப் பெருக்கு மட்டுமின்றி, நேபாளத்தில் காடுகள் தீப்பற்றி எரிவது, 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவது, அரசியல் குழப்பங்கள் மற்றும் மக்கள் இரத்தம் கக்கும் நோய்கள் பரவுவது போன்ற பல கணிப்புகளையும் தெரிவித்திருந்தார். வெள்ளம் தொடர்பான அவரது கணிப்பு அப்படியே பலித்துள்ளதாக ஒரு தரப்பினர் வியந்து கூறிவரும் நிலையில், பொதுவான இயற்கை சீற்றங்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் என மற்றொரு தரப்பினர் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.
