சென்னையில் தோஷம் கழிப்பதாகக் கூறி கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் பெண்ணிடம் நிர்வாண பூஜை நடத்தி, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கிளி ஜோதிடர் இசக்கி முத்து என்பவரை மாம்பலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றும் சம்பவங்களுக்கு மத்தியில், இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட 37 வயது பெண், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்னையில் தங்கியிருந்தபோது பெசன்ட் நகர் கடற்கரையில் கிளி ஜோதிடம் பார்க்கும் இசக்கி முத்துவைச் சந்தித்துள்ளார். அப்பெண்ணின் விவாகரத்து மற்றும் தாயாரின் உடல்நலம் குறித்துச் சரியாகக் கூறியதால், ஜோதிடரை அவர் முழுமையாக நம்பியுள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர், நிகழ்ச்சிகளில் மேலும் புகழ்பெற ‘நிர்வாண பூஜை’ செய்ய வேண்டும் என ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.
நேரடி பூஜைக்கு அப்பெண் தயங்கியதால், வீடியோ கால் மூலமாகவே பூஜையை நடத்தலாம் எனக் கூறி இசக்கி முத்து சம்மதிக்க வைத்துள்ளார். அதன்படி, ஆடைகளைக் களைந்து வீடியோ காலில் தோன்றுமாறு கூறி, இதற்காக ரூ.20,000 கட்டணமும் பெற்றுள்ளார். பூஜை முடிந்த சில நாட்களிலேயே, அந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி கூடுதல் பணம் கேட்டு அப்பெண்ணை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்போன் எண்ணைக் கொண்டு தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், குற்றாலத்தில் பதுங்கியிருந்த இசக்கி முத்துவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் இதேபோன்று வேறு பெண்களையும் ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டியுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
