தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் தற்போது வைரலாகி வருகிறது. சேரன் இயக்கத்தில் பார்த்திபன் நடித்த ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே இருவருக்கும் இடையே இந்த மோதல் வெடித்துள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தின் இறுதி காட்சியில், சாதியக் கட்டுப்பாடுகளால் காதலி இறக்க, அதைத் தாங்க முடியாமல் காதலனும் சிதையில் குதித்து உயிரை மாய்ப்பது போல சேரன் கதையை அமைத்திருந்தார். ஆனால், நாயகன் இறப்பது போன்ற காட்சியில் தனக்கு உடன்பாடில்லை என்றும், அதற்குப் பதிலாக காதலன் பைத்தியமாவது போல காட்சியை மாற்ற வேண்டும் என்றும் பார்த்திபன் பிடிவாதம் பிடித்துள்ளார். கதையின் முக்கியத்துவத்தைக் கருதி சேரன் இதற்கு மறுக்கவே, பார்த்திபன் படப்பிடிப்பிற்கு வர மறுத்து முரண்பட்டுள்ளார்.
இந்தச் சிக்கலில் பார்த்திபனின் அப்போதைய மனைவி சீதா தலையிட்டு அவரைச் சமாதானம் செய்துள்ளார். அதன்பின், இருவரது விருப்பப்படியும் இரண்டு விதமான கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு, தமிழின் மூன்று முக்கிய இயக்குநர்களிடம் காண்பிக்கப்பட்டது. அவர்கள் சேரன் எடுத்த காட்சியே சிறந்தது எனக் கூற, அதுவே படத்தில் வைக்கப்பட்டு படமும் வெற்றியடைந்தது. எனினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஏற்பட்ட மனஸ்தாபத்தால், கடந்த 28 வருடங்களாக இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசாமல் தவிர்த்து வருகின்றனர்.
