தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயைச் சந்தித்து முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார். “என்னுடைய உள்மனது சொல்வதைக் கேட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல் காலத்திற்கு முன்பே இம்முடிவை எடுத்திருந்ததாகவும், தேர்தல் பிந்தைய அரசியல் சூழ்நிலைகளால் தனது விலகல் தள்ளிப்போனதாகவும் விளக்கியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நீண்டகாலக் கூட்டணியான திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டது. இந்தக் கூட்டணி மாற்றங்கள் மற்றும் கட்சிக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள், விமர்சனங்கள் காரணமாக அவர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், மாநிலத் தலைவர் பதவியில் முழுமையாகச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் பதவி விலக முடிவெடுத்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, புதிய தலைவரை விரைவாக நியமிக்குமாறு செல்வபெருந்தகை கேட்டுக்கொண்டார். எனினும், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல், இறுதி முடிவை எடுக்கும் வரை இரண்டு அல்லது மூன்று நாட்கள் பொறுத்திருக்குமாறு செல்வபெருந்தகையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
