உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா-பிருந்தாவனில் அமைந்துள்ள பிரபல ஆன்மீகத் துறவி சாந்த் பிரேமானந்த் மகாராஜின் ‘காலிகுஞ்ச்’ ஆசிரமத்திற்குச் சென்ற நொய்டாவைச் சேர்ந்த விபா சிங் என்ற 28 வயது இளம்பெண், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட விபா சிங், பிரேமானந்த் மகாராஜின் புகைப்படத்தைத் தனது பர்ஸில் வைத்திருந்ததாகவும், ஆசிரமத்திற்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது பெற்றோர் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். மகளைத் தேடி ஆசிரம வாசலில் தவம் கிடக்கும் பெற்றோருக்கு அங்கிருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஹாத்ரஸைச் சேர்ந்த அனுஜ் சவுத்ரி என்ற வாலிபரும் கடந்த 3 மாதங்களாக இந்த ஆசிரமத்தில் இருந்து காணாமல் போயுள்ளதும், பெற்றோர் மகனைச் சந்திக்க ஆசிரம நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆன்மீக ஆசிரமத்தில் அடுத்தடுத்து நபர்கள் மர்மமான முறையில் காணாமல் போவது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மனித கடத்தல் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
