மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் தந்தை ஒருவரே தனது இரு மகள்களை தலைகீழாகத் தொங்கவிட்டு சித்திரவதை செய்ததில் 10 வயது சிறுமி உயிரிழந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பன்புரி கிராமத்தைச் சேர்ந்த நானா ஹைபத் யம்கர் என்ற நபர், பக்கத்து வீட்டில் திருடியதாகத் தனது மகள்கள் மீது சந்தேகம் கொண்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், புதன்கிழமை மாலை 5 மணியளவில் 10 வயது ரிதுஜா மற்றும் 11 வயது அனுஜா ஆகிய இருவரின் கை, கால்களைக் கட்டி வீட்டின் இரும்பு சட்டத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளார்.
இரவு முழுவதும் அந்தச் சிறுமிகள் வலியால் துடித்தும், தாகத்தில் “தண்ணீர்… தண்ணீர்…” எனக் கதறியும், இரக்கமற்ற அந்தப் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட தராமல் வீட்டிற்குள்ளேயே உறங்கியுள்ளனர். பல மணிநேரச் சித்திரவதையைத் தாங்க முடியாமல் ரிதுஜா அன்றிரவே பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலையில் அவர்களது தாத்தா வந்து சிறுமிகளைக் கீழே இறக்கியபோதுதான் ஒரு சிறுமி இறந்து கிடப்பதும், மற்றொருவர் மயக்க நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஜா, நினைவு திரும்பியதும் தனது தந்தை செய்த அராஜகத்தை மருத்துவர்களிடம் கண்ணீருடன் விவரித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் தந்தை நானா ஹைபத் யம்கரை உடனடியாகக் கைது செய்தனர். வெறும் சந்தேகத்திற்காகத் தனது சொந்தக் குழந்தைகளையே இவ்வளவு கொடூரமாகச் சித்திரவதை செய்து கொன்ற இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது.
