உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 15 நாட்களிலேயே செவிலியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தபோது, பதாயூன் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி 15 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு ஒரு சில நாட்கள் கணவர் வீட்டில் வசித்த அந்தப் பெண், பின்னர் பரேலியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் மீட்ட தற்கொலைக் குறிப்பில், “எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல, நானாகவே இந்த முடிவை எடுக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிறு வயதிலேயே பெற்றோரையும், பின்னர் வளர்த்த மாமா-மாமியையும் இழந்த அந்தப் பெண், தனிமையில் வாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தற்கொலையின் பின்னணியில் பல மர்மங்கள் நீடிக்கின்றன. திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஐந்து நாட்களுக்கு முன்பு அவரது கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சந்தித்துப் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலைக் குறிப்பில் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
