ஹரியானா மாநிலம் குருகிராமில் ஊபர் (Uber) ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வாடிக்கையாளரை மதுக்கடைக்கு அழைத்துச் சென்று தமக்கு மது வாங்கித் தரும்படி வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மானவ்’ என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் ஊபர் ஆட்டோவில் பயணித்தபோது, ஓட்டுநர் அவரை ஒரு மதுக்கடைக்கு அழைத்துச் சென்று நிறுத்தியுள்ளார். அங்கு தமக்கு மது பாட்டில் வாங்கித் தந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும் என்று ஓட்டுநர் நிபந்தனை விதித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மானவ், உடனடியாக தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். கேமரா ஆன் செய்யப்பட்டதைக் கண்டதும் ஓட்டுநர் தனது பேச்சை மாற்றிக்கொண்டார். மது கேட்டதை மறைத்துவிட்டு, ஆட்டோவில் பழுது ஏற்பட்டுவிட்டதாகவும், இந்த நிலையில் ஓட்டினால் விபத்து ஏற்படும் என்றும் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மானவ் அந்த ஓட்டுநரின் அநாகரீகமான செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், ஊபர் நிறுவனத்திற்கும் புகார் அளித்தார்.
View this post on Instagram
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஊபர் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த ஓட்டுநரின் செயல் தங்களது விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த நிறுவனம், அவரை ஊபர் தளத்திலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளது. மேலும், பயணிகள் பயணத்தின் போது பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் ஆப்-பில் உள்ள ஆடியோ ரெக்கார்டிங் வசதி அல்லது அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு ஊபர் அறிவுறுத்தியுள்ளது. குருகிராமில் நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
