வெறும் ஏழே நிமிடத்தில் பல கோடி அரசு நிலம் கைமாறியது எப்படி?… வெளியான அதிர்ச்சி ஆவணங்கள்…. பழனியில் அரங்கேறிய படுபயங்கர நில மோசடி… திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான மட நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அப்போதைய பழனி 1-ஆம் எண் இணை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுச் சிபிசிஐடி விசாரணை வளையத்தில் உள்ளார். இந்நிலையில், இவர் அதே ஜூலை 6-ஆம் தேதியன்று, பல கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள ‘சர்க்கார் புறம்போக்கு’ நிலத்தையும் தனியாருக்குச் சாதுரியமாகக் கைமாற்றிப் பதிவு செய்து கொடுத்த மேலும் ஒரு பிரம்மாண்ட மோசடி அம்பலமாகியுள்ளது.

பழனி நகராட்சிக்கு உட்பட்ட பிரதான பகுதியான கவுண்டர் இட்டேரி ரோட்டில் உள்ள 55 செண்ட் நிலத்தின் சந்தை மதிப்பு பல கோடி ரூபாயைத் தாண்டும் சூழலில், இதன் வழிகாட்டி மதிப்பை மிகக் குறைவாகக் கணக்கிட்டு ரூ. 2.67 கோடி எனக் காட்டியுள்ளனர். வருவாய்த்துறையின் அதிகாரப்பூர்வ நகரளவு நிலப் பதிவேட்டின்படி இது தெளிவான ‘சர்க்கார் புறம்போக்கு’ நிலமாகும். அரசுக்குச் சொந்தமான இந்த நிலத்திற்கு எந்தவொரு வில்லங்க ஆய்வும் செய்யாமல், பல கோடி மதிப்பிலான சொத்தைக் குறைந்த மதிப்பில் காட்டி அவசர அவசரமாகப் பதிவு செய்து முடித்துள்ளனர்.

   

இந்த மோசடி நடைபெற்ற விதம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது மகனுக்கு மே 20-இல் எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ஜூலை 6 அன்று தாக்கல் செய்து ஆவண எண் 1437/2026 ஆகப் பதிவு செய்துள்ளார். அது பதிவான அடுத்த 7 நிமிடங்களிலேயே அந்த நிலத்தைச் சௌந்திரபாண்டியன் என்பவருக்கு ரூ. 20 லட்சத்திற்குக் கிரையம் செய்வதாகக் கிரைய உடன்படிக்கைப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   

ஒரே நாளில் 100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தைப் பதிவு செய்த கையோடு, பல கோடி மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தையும் வெறும் 7 நிமிட இடைவெளியில் ஜஸ்டின் மணிகண்டன் மாற்றிப் பதிவு செய்து கொடுத்துள்ளது ஆவணப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. கோயில் நில விவகாரத்தோடு சேர்த்து, தற்போது இந்த அரசு நில மோசடி ஆவணங்களும் வெளியாகியுள்ளதால், சிபிசிஐடி விசாரணையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டுகளும் சட்டப் பிடியும் மேலும் இறுகியுள்ளது.