கிரிக்கெட் விளையாட்டின் மூலம் அதை சொன்ன பா. ரஞ்சித் & கோ.. அனல் பறக்கும் ‘Blue Star’ படத்தின் விமர்சனம்..

By Archana

Updated on:

இது விளையாட்டு படமா அரசியல் படமா சாதி படமா என்ற சந்தேகங்களுடன் வெளிவந்த புளூ ஸ்டார் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்சன் சார்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் புளூ ஸ்டார் .

பா ரஞ்சித்தின் மாணவரான ஜெயக்குமார் இப்படத்தில் அறிமுக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் படத்திலேயே கனமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கொடுத்திருக்கிறார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், பிருத்திவிராஜ், ஆகியோர் நடித்துள்ள புளூ ஸ்டார் திரைப்படம் இன்னும் ஒரு தலித் அரசியலை பேசி இருக்கிறது.

   
2

ஒரு ஊரில் இருக்கும் காலணி ஏரியா மக்களுக்கும் மற்ற பகுதி மக்களுக்கும் இடையே உள்ள உறவுகளையும் உரையாடல்களையும் தத்ரூபமாகப் பதிவு செய்து அதை அரசியல் களத்தில் விளையாட விட்டு இருக்கிறார்கள். காலணி ஏரியா மக்களுக்கும், தெருமக்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டியை வைத்து அதில் தலித் அரசியலையும், விளையாட்டு அரசியலையும் புகுத்தி சிக்ஸர் அடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். கடந்த வருடம் வெளியான போர் தொழில் படத்தை ஹிட் படமாக மாற்றிய அசோக் செல்வன் இந்த வருடம் துவக்கத்திலேயே ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார்.

1

கீர்த்தி பாண்டியன் வரும் அனைத்து காட்சிகளும் கிராமத்துக் காதலை கண்முன் நிறுத்துகிறது. படத்தில் காமெடி ஏரியாவை பாண்டியராஜனின் மகனான பிரித்விராஜ் பார்த்துக் கொள்கிறார். ஏற்கனவே பரியேறும் பெருமாள் மூலம் தலித் அரசியலை மாரி செல்வராஜ் மூலம் உற்று நோக்க வைத்த பா. ரஞ்சித், தனது சிஷ்யன் ஜெயக்குமாருக்கும் விளிம்பு நிலை மக்கள் வலியைச் சொல்ல புளூ ஸ்டார் மூலம் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசை படத்திற்கு பெரிதும் பலம் சேர்க்கிறது. 96 திரைப்படத்தில் இசைக்காகவே கவனிக்க வைத்தவர் இப்படத்திலும் அதனை செவ்வனே செய்திருக்கிறார்.

11 1704944231

அரசியலுக்கு ஒரு மெட்ராஸ், விளையாட்டுக்கு ஒரு சார்பட்டா பரம்பரை, விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு பரியேறும் பெருமாள் என பா. ரஞ்சித்தின் & கோ அத்தனை படைப்புகளையும் ஒன்றாக பிசைந்து அதை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் எனும் அதே பெயரில் புளூ ஸ்டார் ஆக விண்ணில் ஜொலிக்க வைத்துள்ளார் அறிமுக இயக்குனர் ஜெயக்குமார். சாந்தனு கேரியரில் ப்ளூ ஸ்டார் ஒரே திருப்பமுனையாக அமைந்திருக்கிறது. மேலும் கீர்த்தி பாண்டியனும் நடிப்பில் மெருகேறி கவனம் ஈர்த்திருக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கூட பா. ரஞ்சித்தும், கீர்த்தி பாண்டியனும் அயோத்தி ராமர் பற்றிய கருத்துக்களை கூறி பரபரப்பை கிளப்பினார்கள். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் சற்று கூடியிருந்த நிலையில் அதை சரியாக நிவர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார்.

புளூ ஸ்டார் : சினிமாவின் துருவ நட்சத்திரம்

ரேட்டிங் 7.5/10

author avatar
Archana