தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களில் முன்னணியில் இருப்பவர் ஜானகி. இவரது குரலில் வரும் பாடல்களை கேட்டு ரசிகர்கள் மெய்மறந்து போவார்கள். இந்நிலையில் பெண் கதாபாத்திரங்கள் சோகமாக பாடும் பாடல் எனில் ஜானகி தான் ஒரே சாய்ஸ். இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் எவர்க்ரீன் கிளாசிக் ஹிட்களாக இப்போது வரை சிலாகிக்கப்படுகின்றன.
ஆந்திராவை பூர்விகமாக கொண்ட எஸ்.ஜானகி பல இசை நிகழ்ச்சிகளில் முதலில் பாடினார். எஸ்.ஜானகி மேடைப்பாடகியாக இருந்த போது அவரின் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவரின் மகனான ராம்பிரசாத் என்பவர் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
ஜானகியின் திறமை வெறும் இசைக்கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. திரைத்துறைக்கும் வர வேண்டும் என ராம்பிரசாத்தான் அவரை ஊக்குவித்தாராம். அவரது ஆலோசனைப்படி ஜானகியும் கேட்டாராம். அப்படித் தான் ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்தாராம். முதலில் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கில் சில பாடல்களைப் பாடியிருந்தாலும் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அப்போதுதான் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த பாடல் கிடைத்தது. எஸ் எம் சுப்பையா நாயுடு இசையில் கொஞ்சும் சலங்கை என்ற படத்தில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலை பாடவைக்க அப்போது உச்சத்தில் இருந்த பி சுசீலாவை அழைத்துள்ளனர். அவர் வந்து வரிகளையும் மெட்டையும் கேட்ட பின்னர் என்னால் இந்த பாடலை பாட முடியாது என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.
அதன் பிறகுதான் இந்த பாடலை பாட எஸ் ஜானகியை அழைத்துள்ளனர். அவரும் வந்து அந்த பாடலை சிறப்பாகப் பாடிக் கொடுத்தாராம். அந்த பாடல் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியான திருநாள் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசையரசி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் எஸ் ஜானகி. இப்போது வயது மூப்பு காரணமாக அவர் பாடுவதை நிறுத்தியுள்ளார்.