ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் பிரபல நடிகரான அர்ஜுனின் மகள் ஆவார். ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முதல்வன், தாய் மேல் ஆணை, ஆயுத பூஜை, சொந்தக்காரன், சுதந்திரம், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், மருதமலை, ஏழுமலை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் அர்ஜுன் நடித்துள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அர்ஜுன் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது ஐஸ்வர்யாவுக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உமாபதிக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்தனர்.
உமாபதி மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, திருமணம் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா நடிக்க கூடாது என தம்பி ராமையாவின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்து ஐஸ்வர்யா எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் ஜூன் மாதம் பத்தாம் தேதி கெருகம்பாக்கத்தில் இருக்கும் அர்ஜுனனின் தோட்டத்தில் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக திருமண பத்திரிகையை பாக்ஸ் போன்ற பிரத்தியேகமாக டிசைன் செய்துள்ளனர். அந்த ஒரு பத்திரிகையின் விலை சுமார் 5 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.