டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான படம் 2018. மிகுந்த வரவேற்பு பெற்ற இந்த மலையாள திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் 2018-ல் கேரளா சந்தித்த பெரு வெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த படம் தமிழிலும், தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. சுமார் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று லாஸ் ஏஞ்சல்சில் 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான 2018 அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தேர்வு குழுவின் தலைவரான கிரிஷ் காசரவள்ளி கூறியதாவது, காலநிலை மாற்றம் தொடர்பான பொருத்தமான கதை கருவுடன் சமூகத்தின் வளர்ச்சியை புரிந்து கொள்ளும் வகையில் 2018 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது என கூறினார். கிரிஷ் காசரவள்ளி தலைமையிலான 16 பேர் கொண்ட குழு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
95-வது ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத்தி படமான ‘ தி செல்லோ ஷோ’ திரைப்படம் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது தி கேரளா ஸ்டோரி, ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, மிஸ்டர் சாட்டர்ஜி வி எஸ் நார்வே, பாலகம், ஆகஸ்ட் 16, 1947, பாப்லியோக் உள்ளிட்ட படங்கள் பரிந்துரை பட்டியில் இருந்த நிலையில் 96-வது ஆஸ்கர் விருது போட்டிக்கு 2018 திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பினர் தேர்வு செய்துள்ளனர்.