“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

By Muthu Mani on ஆனி 18, 2026

Spread the love

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம் வருகிறார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் குந்தன்லால் அவத்ராமி – ஷாநாஸ் தம்பதியின் மகனான இவர், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, நடிகை ஜான்வி கபூர், நைசா தேவ்கன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர வாரிசுகளின் நெருங்கிய நண்பராவார். பிரபலங்களுடன் புகைப்படம் எடுக்கும்போது அவர்களின் மார்பு மீது கை வைத்து போஸ் கொடுப்பது ஓரியின் தனித்துவமான ‘சிக்னேச்சர் போஸ்’ ஆகும்; அவர் அப்படித் தொட்டால் முதுமை வராமல் இளமையாக இருக்கலாம் என்று பிரபலங்கள் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் பெரும் பிரபலமாக இருக்கும் ஓரி, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் பிராண்ட் விளம்பரங்கள் மூலமாகப் பை நிறையச் சம்பாதித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் ஒரேயொரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிடுவதற்குப் பல நிறுவனங்களிடம் இருந்து சுமார் 75 லட்சம் ரூபாய் வரை கட்டணமாகப் பெறுவதாகக் கூறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். சாதாரண மக்கள் காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் கடினமாக உழைத்தாலும் ஈட்ட முடியாத தொகையை, இவர் ஒற்றை வீடியோ மூலம் சம்பாதிப்பது சமூக வலைதளங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

   

அதுமட்டுமின்றி, இவர் தினந்தோறும் பார்ட்டிகளில் ஜாலியாக வலம் வருவது சும்மா அல்ல; அதுவே அவரது முழுநேரத் தொழில் என்றும் ஓரி வெளிப்படுத்தியுள்ளார். பெரும் புள்ளிகள் தங்களின் பிறந்தநாள், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு ஓரியை அழைக்க 15 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை சன்மானமாக வழங்குகின்றனர். இந்தத் தொகைக்குத் தான் என்ன செய்வேன் என்பதை விளக்கிய ஓரி, விசேஷங்களுக்குச் சென்று அங்கிருக்கும் விருந்தினர்களிடம் நாம் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள் என்பது போலப் பழகுவதற்கும், குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அவர்கள் யாரைத் தொடச் சொல்கிறார்களோ அவர்களைத் தொட்டு போஸ் கொடுப்பதற்கும் தான் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.