“உங்க உருட்டல் மிரட்டலுக்கு நாங்க அஞ்சமாட்டோம்”…. தைரியம் இருந்தா ஓபன் பண்ணுங்க CM சார்…. ஆளுங்கட்சியை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்….!

By Nanthini on ஆவணி 21, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை அவை கூடியதும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சபாநாயகர் அவையை சிறப்பாக நடத்தி வருவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்குப் பேசச் சம வாய்ப்பளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் பேசும்போது எவ்வித ஆதாரமுமின்றி குற்றச்சாட்டுகளை வைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், சட்டமன்றத்தில் பேசப்படும் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அவை நேரலையில் சென்றுவிடுவதால் சமூக வலைதளங்களில் குறும்படங்களாக (ரீல்ஸ்) வைரலாகி வருவதாகவும், அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது இதனால் எந்தப் பயனையும் தருவதில்லை என்றும் கூறி இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் தனது மேஜையில் திமுக அரசை குற்றம் சாட்டும் வகையில் 3 கோப்புகள் (Files) இருப்பதாகக் கூறி, அதனைத் திறக்க வைத்துவிடாதீர்கள் என எச்சரித்திருந்தார். தயவுசெய்து அந்த மூன்று கோப்புகளையும் உடனடியாகத் திறந்து பார்த்து, அதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். எதற்காகப் பயப்படுகிறீர்கள், எதற்காகக் காலம் தாழ்த்துகிறீர்கள்? மூன்று மாதங்களாக இதையே கூறி வருகிறீர்கள், நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

   

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் உதயநிதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது, முதலமைச்சர் குறிப்பிட்ட அந்த கோப்புகள் விரைவில் திறக்கப்படும் என்றும், வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் தற்போதைய அரசில் தான் சட்டமன்ற நிகழ்வுகள் நேரடியாக நேரலை செய்யப்படுவதாகவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

   

அமைச்சர்களின் பதிலுக்கு மீண்டும் பேசிய உதயநிதி, “சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக நிகழ்வுகளை நேரலை செய்தது திராவிட மாடல் அரசான நாங்கள்தான். ஆனால், அவை நேரலை செய்யப்பட்டு, பின்பு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக மாற்றப்பட்டுப் பரவி வருகிறது. எனவே அந்த 3 கோப்புகளையும் விரைவில் திறந்து பாருங்கள்; யார் தவறு செய்திருந்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள். இதுபோன்ற உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் திமுகவினர் ஒருபோதும் பயப்பட மாட்டோம்” என அழுத்தமாகத் தெரிவித்தார்.