தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், புதிய அரசிடம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மகேந்திர குமார் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மகேந்திர குமார், 59 ஆண்டுகால அரசியல் ஆட்சி முறையை மாற்றி, அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் ஒரு புதிய விடியல் பிறக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு தவெகவிற்கு வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த திமுக அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் தனது தேர்தல் அறிக்கையிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததே அரசு ஊழியர்களின் பெரும் ஆதரவிற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
செய்தியாளர் சந்திப்பில் சங்கத் தலைவர் முன்வைத்த 4 பிரதான கோரிக்கைகள் பின்வருமாறு:
- பழைய ஓய்வூதியத் திட்டம்: தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 01.04.2003 முதல் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் தற்போது பணியில் உள்ளவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (CPS ரத்து) உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
- அரசு பணியாளர் வாரியம்: அரசு ஊழியர்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் களைவதற்கு, நீண்ட நாள் கோரிக்கையான ‘தனி அரசு பணியாளர் வாரியம்’ அமைக்கப்பட வேண்டும்.
- கருணை அடிப்படை பணி நியமனம்: கடந்த ஆட்சியில் காலமுறை ஊதியம் இல்லாத துறைகளுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படாமல் சமூக நீதி மறுக்கப்பட்டது. எனவே சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகங்கள், டேங்க் ஆபரேட்டர்கள், சமையலர்கள், தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
- பணி நிரந்தரம்: தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இந்த நான்கு முக்கிய கோரிக்கைகளும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய பிரதான கோரிக்கைகள் ஆகும். தேர்தல் அறிக்கையில் “அறம், பொருள், இன்பம்” எனப் பகுத்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தவெகவிற்கு வாக்களித்துள்ளதால், முதல்வர் விஜய் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி இந்த நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
