திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்து வந்த தர்ப்பகராஜ் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் 25-வது புதிய கலெக்டராக வந்தனா கார்க் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர், பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி மற்றும் எம்எஸ்சி பயோ மெடிக்கல் சயின்ஸ் முடித்தவர். இதற்கு முன்பு திருப்பத்தூர் சப் கலெக்டர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள வந்தனா கார்க், நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய கலெக்டர் வந்தனா கார்க் பொறுப்பேற்பதற்காக அவசர அவசரமாக அலுவலக அறைக்குள் நுழைந்தபோது, அங்கு ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பணிமாறுதலில் செல்லும் பழைய கலெக்டர் தர்ப்பகராஜ், புதிய கலெக்டரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவிப்பதற்காக அந்த அறையிலேயே காத்திருந்தார். ஆனால், அதை கவனிக்காமல் நேராக கலெக்டர் இருக்கைக்குச் சென்ற வந்தனா கார்க், கோப்பில் கையெழுத்திட முயன்றார்.
அப்போது பழைய கலெக்டர் தர்ப்பகராஜ் பூங்கொத்தைக் கொடுத்து வாழ்த்து தெரிவிக்க, அவரைப் பார்த்த புதிய கலெக்டர் வந்தனா கார்க், “உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே” என்று வெகுளித்தனமாகக் கேட்டுள்ளார். அதற்கு தர்ப்பகராஜ் புன்னகையுடன், “நான் தான் (இங்கிருந்த) கலெக்டர்” என்று கூற, அதிர்ச்சியும் வெட்கமும் கலந்த சிரிப்புடன் வந்தனா கார்க் “சாரி சார்” என்று கூறினார். இதனால் அந்த அறையே சிரிப்பொலியால் நிறைந்த நிலையில், இந்த கலகலப்பான காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வேகமாக வைரலாகி வருகிறது.
