இந்திய சினிமாவின் பல்கலைக்கழமாக ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கியது ஏ.வி.எம் ஸ்டூடியோ. பல்வேறு மொழித் திரைப்படங்கள் தினசரி இங்கு ஷூட்டிங் செய்யப்பட்டு பல ஹிட் படங்களைக் கொடுத்த சினிமாவின் சொர்க்க பூமி. மேலும் ஏ.வி.எம் நிறுவனமும் பல ஹிட் படங்களை தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது. இப்படிப்பட்ட ஏ.வி.எம் .ஸ்டியோ நிறுவனர் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரையே நடிகை ஒருவர் இரண்டு மாதமாக உள்ளே நுழைய விடாமல் செய்திருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமல்ல பழம்பெரும் நடிகை பானுமதி தான்.
ஏ.வி.எம் தயாரித்த அன்னை படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க பானுமதியை மாற்றாக வேறு யாரும் இல்லைஎன்ற நிலையில் பானுமதியோ, பழைய மனக்கசப்புகளால் ஏவிம் தயாரிப்பு படங்களில் நடிப்பதில்லை என்ற மனநிலையிலிருந்தார். ஆனால் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரும், பானுமதிதான் இப்படத்தில் நடித்தாக வேண்டுமென்று கூறி, அவரை ஒப்பந்தம் செய்ய தனது மகன்களை அனுப்பினார்.

#image_title
ஆனால் பானுமதி முதலில் மறுத்தாலும், தன் கதாபாத்திரம் பிடித்ததாலும், தயாரிப்பு தரப்பினரின் நேர்த்தியான அணுகுமுறையாலும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனாலும், ஏவிஎம் ஸ்டுடியோவில் வந்து தான் நடிக்கமாட்டேனென்றும், வேறு ஸ்டுடியோ அல்லது வெளிப்புற இடங்களில் படம்பிடித்தால் நடிப்பதாகவும் கூறினார். அது சாத்தியமற்றதென்று ஏ.வி.எம். தங்கள் நிலையைக் கூற, பானுமதியோ, அப்படியானால், தான் ஏவிஎம் ஸ்டுடியோ வந்தே படம் நடிப்பதாகவும், தான் நடிக்கும் காட்சிகள் படமாகி முடிவடையும் காலம் வரை, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஸ்டுடியோவிற்குள்ளேயே வரக்கூடாதென்றும் நிபந்தனை விதித்தார்.
ஒரு கனம் அதிர்ந்து போன தயாரிப்பு தரப்பினர், அங்கிருந்து வெளியேறி நடந்ததை ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் கூற, அவரோ சாதாரணமாக இதைக் கருதி, பானுமதி நடித்தால் போதுமென்றும், தான் அதுவரை ஸ்டுடியோவிற்கு வராமல், வீட்டிலிருந்தபடியே இதர படவேலைகளைக் கவனிப்பதாகவும் கூலாக கூறினார். அதன்பின் அன்னை படம் சிறப்பாக உருவாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்த இருமாதங்களும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஸ்டுடியோ பக்கமே வரவில்லையாம். படம் வெளியாகி அமோக வெற்றிபெற்றது.

#image_title
இறுதியாக பட வெற்றி விழாவின்போது, பானுமதி தன் செயலுக்கு வருந்தி, ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் கால்களில் பணிந்து வணங்கினார். ரசிகர்கள், அதை மரியாதையின் அடையாளமாகவே கருதினர். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தினருக்கே அதன் உண்மை நிலவரம் தெரிந்திருந்தது.