புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியும், வீண் வழக்குகளைத் தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தவர். சில மாதங்களுக்கு முன்பு லாஸ்பேட்டையில் 30 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ள முக்கியச் சாலையை ‘நீர்நிலை ஆக்கிரமிப்பு’ எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்த கோபாலுக்கு ரூ.1,00,000 அபராதம் விதித்துக் கடுமையான தீர்ப்பளித்தது. இந்தச் செய்தியைப் புதுச்சேரி தி.மு.க மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கோபால், காயத்ரி ஸ்ரீகாந்தின் பெண்மையை இழிவுபடுத்தி வாட்ஸ்-அப் குழுக்களில் கொலை மிரட்டல் விடுத்ததால் ஜூன் மாதம் போலிஸாரால் கைது செய்யப்பட்டுப் பின் ஜாமீனில் வெளிவந்தார். வெளியில் வந்ததும் காயத்ரியைப் பழிவாங்கத் துடித்த கோபால், ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, பெரியகடை ஆகிய 3 காவல் நிலையங்களில் தனித்தனியாக அதிர்ச்சித் தரும் புகார்களை அளித்தார். அதில், ‘காயத்ரி ஸ்ரீகாந்த் இரவு நேரத்தில் தன்னை உல்லாசத்திற்கு கைகாட்டி அழைத்தார்’ என மிகக் கேவலமாகப் பொய்க் குற்றச்சாட்டுகளைக் சுமத்தினார்.
தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயன்ற கோபால் மீது காயத்ரி ஸ்ரீகாந்த் அளித்த புகாரின் பேரில் போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபால் பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பொய்ப் புகார்களைத் தயார் செய்தது ஆதாரங்களுடன் அம்பலமானது. அரசியல் பின்னணி கொண்ட கோபாலை போலிஸார் மிகவும் அமைதியான முறையில் விசாரணைக்கு வரவழைத்து, ‘சைலண்டாக’ கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே கோபால் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் குறித்துப் பேசிய ஆபாச வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது மேலும் பல புகார்கள் குவிய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
