சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் அளித்த ரகசியப் புகார் மற்றும் பென்டிரைவ் ஆதாரத்தின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பவர் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நெஞ்சை நடுங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தேனாம்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரின் உதவியுடன் சிறுமிகளை வரவழைத்துப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது அம்பலமானது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளைக் குறிவைத்து, அவர்களைப் பிற முக்கியப் பிரமுகர்களுக்கும் அனுப்பிய அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்தன. இது தொடர்பாகப் போலிஸார் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது மேலும் பல பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் படி, தொழிலதிபர் வீரமணியால் இதுவரை 9 சிறுமிகள் வரை கொடூரமாகப் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சாந்தியின் செல்போனை ஆய்வு செய்தபோது, “2003-ல் ஒரு சிறுமி உயிரிழந்தது நினைவிருக்கிறதா?” என வீரமணிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி சிக்கியதால், பழைய கொலை வழக்கு குறித்தும் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, வீரமணியைப் புழல் சிறை வளாகத்திலேயே வைத்து 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
